செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை நிறுவியது. கி.பி. 600க்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 21.1.2009ஆம் நாள் தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம் உட்பிரிவு 10இன் கீழ் (1975ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 27) பதிவு செய்யப்பட்டது. ஆட்சிக்குழு, கல்விக்குழு, நிதிக்குழு, உயர்நிலைக்குழு ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டது.


மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவனத்தின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த ஐம்பெருங்குழு, எண்பேராயம் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

திட்டங்களும் செயற்பாடுகளும்

தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புக்களைக் கவனத்தில் கொண்டு, பல திட்டங்களைத் தீட்டி இந்நிறுவனம் செயற்பட்டுவருகிறது.

  • பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்
  • தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆராய்தல்
  • பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்
  • இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல்
  • திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல்
  • உலக அளவில் ஆய்வுக் களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்துதல்
  • பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல்
  • தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்
  • செம்மொழி தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்
  • செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோர்க்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்

இவை போன்று இன்னும் பல செம்மொழித் தமிழ் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

41 செவ்வியல் நூல்கள்

செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை; தனித்தன்மை கொண்டவை.

தொல்காப்பியம்

எட்டுத்தொகை

நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்

பதிணென்கீழ்க்கணக்கு

நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது
இனியவைநாற்பது
கார்நாற்பது
களவழிநாற்பது
ஐந்திணைஐம்பது
ஐந்திணைஎழுபது
திணைமொழிஐம்பது
திணைமாலைநூற்றைம்பது
பழமொழி
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
முத்தொள்ளாயிரம்
இறையனார் களவியல்

பத்து முதன்மைத் திட்டப் பணிகள்

செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் புலப்படுத்தும் பத்து முதன்மைத் திட்டப் பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.

1. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு

தொன்மைக் காலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான 41 நூல்களையும் மரபுவழி மூலபாடச் செம்பதிப்புகளாகச் சுவடிகள், பழம்பதிப்புகள், உரைமேற்கோள்கள் கொண்டு ஒப்பிட்டு உருவாக்குதல்.

2. பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்

41 நூல்களுக்கும் மொழிபெயர்ப்புகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். புதிதாக இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளும் மேற்கொள்ளப்பெறும்.

3. வரலாற்று அடிப்படையில் தமிழ் இலக்கணம்

4. தமிழின் தொன்மை – ஒரு பன்முக ஆய்வு

பண்டைத் தமிழரின் சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் இயல்புகளை வெளிக்கொணரும் வகையில் தமிழின் தொன்மை பற்றிய பன்முக ஆய்வு நிகழ்த்தப்பெறும்.

தமிழ் வழக்காறுகள் ஆய்வுத் திட்டம்

வட்டாரம், தொழில் சார்ந்த தமிழ் வழக்காறுகள் தொகுக்கப்படும். அகராதிகளில் பதிவு செய்யப்படாத நூறாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குச் சொற்கள் திரட்டப்படும்.

6. தமிழும் பிறமொழிகளும்

தமிழை இந்திய மொழிகளோடும் பிற உலக மொழிகளோடும் ஒப்பிட்டு ஆராய்தல்.

7. பழந்தமிழ் ஆய்விற்கான மின்நூலகம்

அரிய சுவடிகள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தேடித் தொகுத்து மின்பதிப்பு ஆக்குவதோடு தமிழ் ஆய்வாளர்கள் ஆய்வுத் தரவுகளை எளிதில் பெற்றுக்கொள்ள மின்நூலகம் வடிவமைக்கப்படுகிறது.

8. இணையவழிச் செம்மொழியைக் கற்பித்தல்

உலகெங்கும் உள்ளோர் பழந்தமிழ் நூல்களை எளிய முறையில் இணையம் வழியே கற்றுப் பயன்பெறப் பாடத்திட்டம் வகுக்கப்பெற்றுள்ளது.

9. பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்

41 பழந்தமிழ் நூல்களும் அவற்றிற்கான எழுத்துப்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, உரைகள், அருஞ்சொற் பொருள்கள், இலக்கணக் குறிப்புகள் முதலியனவும் கணினியில் உள்ளீடுசெய்யப்படும். இந்நூற்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புக்களையும் அறிய தொழில்நுட்ப ஏந்துகள் உருவாக்கப்படும்.

10. பழந்தமிழ்க் காட்சிக் குறும்படங்கள்

தமிழின் அரிய வரலாற்றுக் கருவூலங்களான இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, நாணயம், கலை, பண்பாடு, அயலகத் தமிழ் உறவு குறித்த காட்சிக் குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன.

நூலகம்

செம்மொழி நூலகத்தில் 20,000 அரிய நூல்களும் பழந்தமிழ் ஆய்விற்கு உதவும் மின்படியாக்கப்பட்ட நூல்களும் ஓலைச்சுவடிகளும் இதழ்களும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

இணையத்தளம்

இணையத்தளத்தில் இந்நிறுவனத்தின் விரிவான நோக்கங்களும் செயற்பாடுகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை

செம்மொழித் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.12,000த்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஆய்வு தொடர்பான பிற செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000/- வழங்குகிறது.

முனைவர் பட்ட மேலாய்வு உதவித்தொகை

முனைவர் பட்டம் பெற்றபின் பழந்தமிழாய்வில் ஈடுபட விரும்பும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு நிறுவனம் மாத உதவித்தொகையாக ரூ.18,000த்தை இரண்டாண்டுகளுக்கு வழங்குகிறது. ஒவ்வோராண்டும் பிற செலவினங்களுக்காக ரூ.30,000/- வழங்குகிறது.

குறுகிய காலத் திட்டப் பணிகள்

பழந்தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையையும் தனித்தன்மையையும் தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும் நிறுவனம் நிதியுதவி அளிக்கிறது.

செம்மொழித் தமிழ் விருதுகள்

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ரூ.5 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும் நினைவுப் பரிசும் ரூ.5 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய குறள்பீடம் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 அகவைக்குட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும் நினைவுப் பரிசும் ரூ.1 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருதுகள் ஒவ்வோராண்டும் ஐவர்க்கு வழங்கப்படுகின்றன.

கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

மாண்புமிகு மேனாள் தமிழக முதல்வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கிக் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை நிறுவனத்தில் நிறுவியுள்ளார். அறக்கட்டளை ஆண்டுதோறும் தகுதிவாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ.10 இலக்கம் பரிசுத் தொகையும் பாராட்டிதழும் ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருதை வழங்கிச் சிறப்பித்துவருகிறது.

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.