கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கித் தோற்றுவித்துள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பெறும்.

இவ்விருது இந்திய நாட்டில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளுள் ஒன்றாகும்.

பத்து இலட்சம் உரூபாய் (ரூ.10,00,000) பரிசுத்தொகைக்கான காசோலை, மதிப்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்.

ஒவ்வோராண்டும் இந்த விருது அறக்கட்டளையை நிறுவிய கலைஞரின் பிறந்த நாளான சூன் 3 அன்று வழங்கப்படும்.

செம்மொழித் தமிழாய்விற்குச் சீரிய முறையில் பங்காற்றியுள்ள அறிஞர் அல்லது நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்பெறும். இப்பங்களிப்பு பண்டைத் தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் பற்றிய புதிய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும் உலக அளவில் ஏற்புடையதாகவும் அமைய வேண்டும். கீழ்க்காணும் துறைகளில் மேற்கொண்ட ஆய்வாக அது அமையலாம்:

  • தொல்லியல்
  • கல்வெட்டியல்
  • நாணயவியல்
  • பண்டை இலக்கணமும் மொழியியலும்
  • இலக்கியத் திறனாய்வு
  • படைப்பிலக்கியம்
  • மொழிபெயர்ப்பு
  • இசை, நடனம், நாடகம், ஒவியம், சிற்பம்

தனித்தன்மையும் மேன்மையும் உலகளாவிய ஏற்பும் பெற்ற ஒரு நூலிற்காக அல்லது ஒர் அறிஞரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்படும்.


விருது பெறும் அறிஞர் எந்நாட்டினைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; விருது பெறும் நூல் அறிவுலகைக் கவர்ந்த பெருமையுடையதாயின் எந்த மொழியிலும் இருக்கலாம்.


2009ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை விருது 2010 ஜுன் திங்கள் 23-27இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.